குலதெய்வ கட்டு அவிழ பரிகாரம்
குலதெய்வ கட்டு என்பது நம் குலதெய்வத்தை நமக்காக செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தும் படியான ஒரு தீவினை செயலாகும். முன்னோர்கள் சாபம், பெண் சாபம், குலதெய்வ சாபம் இருந்தாலும் இது போன்ற குலதெய்வ கட்டு போடப்பட்டிருக்கலாம். இதனால் குடும்பத்தில் எந்தவிதமான நல்லதும் நடைபெறுவது கிடையாது. வம்சம் தழைப்பதில் பிரச்சனை இருக்கும். இதிலிருந்து வெளி வருவதற்கு குலதெய்வ கட்டை எப்படி அவிழ்ப்பது? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
முன்னோர்கள் சாபம் இருந்தால் குலதெய்வ சாபமும் நிச்சயம் இருக்கும். நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்களை சரியாக செய்திருக்க வேண்டும். சரியாக செய்ய முடியாதவர்கள் வழிவழியாக அதன் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது விதியாகும். இதனால் குலதெய்வம் கட்டப்பட்டு விடும். குலதெய்வம் நினைத்தால் கூட உங்களுடைய இந்த நிலையிலிருந்து உங்களை மீட்டு எடுக்க முடியாத சூழ்நிலை நிலவும்.
குலதெய்வத்திற்கும் நம் முன்னோர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. நம் குலத்தைக் காக்கும் முன்னோர்கள் தான் குலதெய்வம் ஆகவும் பின் மாறுகிறார்கள். பெரிய தெய்வங்கள் ஒரு குடும்பத்திற்கு குலதெய்வமாக இருக்க முடியாது. சிறு தெய்வங்கள் மட்டுமே குலதெய்வமாக கருதப்படுகிறது எனவே உங்களுடைய குலதெய்வம் எதுவென்று தெரியாமல் இருந்தாலும், நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
மேலும் உங்களுடைய முன்னோர்களை கேட்டறிந்து குலதெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள். குலதெய்வ கட்டு இருப்பதற்கு பெண் சாபமும் ஒரு காரணமாக இருக்கிறது. அபலை பெண் ஒருவருக்கு நீங்கள் செய்த பாவமானது ஏழேழு ஜென்மத்திற்கும் பின் தொடர்வதாக ஒரு நம்பிக்கை உண்டு. எந்த சாபத்தையும் பெற்றுவிடலாம், பெண் சாபத்தை பெறக் கூடாது. அதுவும் விதவைப் பெண்களுக்கு செய்யக்கூடிய பாவம் பொல்லாதது. இது உங்களுடைய சந்ததியினரை பாதிக்கும்.
குலதெய்வ கட்டு நீங்குவதற்கு முதலில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள் சிறிதளவு போடுங்கள். மூன்று மயிலிறகை உள்ளே வையுங்கள். மயிலிறகு முருகன் அருளை கொடுக்கும் ஒரு பொருளாகும். பின்னர் அதனுடன் மூன்று வேப்பங்கொழுந்தினை வையுங்கள். இது அம்பாளின் அருளை பெற்று தரும்.
பொதுவாக குலதெய்வத்தை அறியாதவர்கள் அம்பாள் அல்லது முருகன் வழிபாட்டை மேற்கொள்வார்கள். இந்த கண்ணாடி டம்ளரை யாருடைய கைகளுக்கும் எட்டாதவாறு வீட்டின் வரவேற்பறையின் மேற்பகுதியில் வையுங்கள். அனைவரின் கண்களுக்கும் இது தெரிய வேண்டும். டம்ளருக்கு மஞ்சள் குங்குமம் வையுங்கள்.
பின்னர் தினமும் நிலை வாசலுக்கு பூஜை செய்ய வேண்டும். நிலை வாசலில் தான் குலதெய்வம் தாங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் தான் நிலை வாசலில் ஏறி நின்று விளையாடக் கூடாது. அடிக்கடி வாசல் கதவை ஆட்டக்கூடாது.
நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் தினமும் வைத்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர். அவ்விடத்தில் மாலையில் இரண்டு அகல் தீபங்களையும் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் குலதெய்வ அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் ஒரு முகம் பார்க்கும் சிறிய அளவிலான கண்ணாடி ஒன்றை வையுங்கள். கண்ணாடிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பியுங்கள். அருகில் ஒரு சிறு குவளையில் தண்ணீர் வையுங்கள்.
ஒவ்வொரு வெள்ளி அன்றும் இதுபோல நிலை வாசல் பூஜையும், பூஜை அறையில் கண்ணாடிக்கு ஆரத்தி காண்பித்தும், கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரையும், வேப்பிலையையும் மட்டும் புதிதாக மாற்றியும் வைக்க வேண்டும்.
ஒரு மண்டலத்திற்குள் குலதெய்வ கட்டு நீங்கி குலதெய்வம் உங்கள் வீட்டில் இருப்பதை பூஜை அறையில் இருக்கும் கண்ணாடி வழியாக உங்களுக்கு காண்பிக்கும். கண்ணாடி ஆனது குலதெய்வத்தை பிரதிபலிக்கும்.
குவளையில் வைத்துள்ள தண்ணீர் பாதி அளவுக்கு குறைந்துவிடும். வாரம் ஒரு முறை நீங்கள் தண்ணீர் மாற்றி வாருங்கள். எந்த வாரம் தண்ணீரின் அளவு குறைகிறதோ, அப்பொழுது குலதெய்வ கட்டு நீங்க பட்டு குலதெய்வ அருள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர முடியும்.
0 கருத்துகள்