Brahmapureeswarar Temple - tirupattur
உங்கள் தலையெழுத்து மாற வேண்டுமென்றால் அதனை எழுதிய பிரம்மன் கோவிலுக்கு தான் நீங்கள் செல்ல வேண்டும்.
நீங்கள் சென்று பிரம்மனிடம் மன்றாட வேண்டிய தலம் தான் திருப்பட்டூர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வதே 'விதி இருப்பின்' மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மை.
திருப்பட்டூர் வரலாறு :
பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.
அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? ‘உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக!’ என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்லவிதமாக, திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன்.
அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா.
திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம்.
0 கருத்துகள்